தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்விளை பொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
வேளாண் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் மையங்களை தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், தொழில் முன்னேற்றத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள், பொதுப்பிரிவினர் அனைவரும் தொழில் தொடங்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் மையங்கள் நிறுவ நிதி ஆதரவு வழங்கப்படுவதுடன், வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் வகையில் இத்திட்டத்தின் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிதி ஆதரவாக ரூ.10 கோடி வரையிலான புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், தொழில் முன்னேற்றத்தில் பெண்கள், ஆதிதிராவிடர்கள், மற்றும் பழங்குடியினருக்கு குறிப்பாக இவர்களில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் முதலீட்டு மானியம் என அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதுதவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் மானிய உதவியானது பின்னேற்பு மானியமாக அந்தந்த வங்கிகளில் பயனாளிகளின் கடன் பெற்ற வங்கி கணக்கில் விடுவிக்கப்படும். திட்ட மதிப்பிட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும். திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) மூலம் முன்மொழியப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவால் ஆய்வு செய்யப்படும். பின்னர் அவ்விண்ணப்பங்கள் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் தலைமையிலான திட்ட ஒப்புதல் குழுவானது பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து பயனாளிகளை தேர்வு செய்யும். எனவே, இத்திட்டத்தின் கீழ் வேளாண் மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்க விரும்புபவர்கள் தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


