தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாதா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இன்பெண்ட் ரோசஸ் (28). இவர் நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தின் பின்புறம் உள்ள தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாதா கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து உள்ளார். அப்போது அவரை, இன்பெண்ட் ரோசஸ், மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறி உள்ளார்.
இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். சிறிது நேரம் கழித்து ராஜா, தனது சகோதரர் சதீஷ், நண்பர் மனோஜ் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்களுடன் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்து உள்ளனர். அவர்கள் இன்பென்ட்ராசாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறியவாறு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம் போட்டு உள்ளனர். அத்துடன் பொதுமக்கள் அந்த பகுதிக்கு திரண்டு வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. உடனடியாக காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


