கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயில், கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயிலில் கந்த சஷ்டி, லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சண்முகர் ஜெபம் நடைபெற்றது. பின்னர், மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. பின்னர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. மாலை மீண்டும் லட்சார்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.
அக். 28ஆம் தேதி காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு மேல் கார்த்திகேயர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும். அக். 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், 7.31 மணிக்கு புஷ்பாஞ்சலி, சாந்தாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
செண்பகவல்லி அம்பாள் கோயிலுடன் இணைந்த, மார்க்கெட் சாலையில் உள்ள சக்தி விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, செல்லியாரம்மன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சண்முகர்-வள்ளி-தெய்வானை சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு திருவீதி உலா நடைபெற்றது. அக். 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுமும், அக். 28 இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.
கழுகுமலை கழுகாசல மூர்த்தி
கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கோயில் நடை, அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு, சுவாமி வள்ளி தெய்வானை பிராட்டியுடன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
அக். 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். அக். 30ஆம் தேதி இரவு 6 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மோகன்ராம், நிர்வாக அதிகாரி மு. கார்த்தீஸ்வரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


