தூத்துக்குடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் துரைசிங் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். மகன் சூர்யா (22). இவர் மீன்பிடி தொழில் மற்றும் ஸ்வீட் ஸ்டாலில் கூலி வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் சூர்யாவை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு சூர்யா வெள்ளப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து சூர்யாவை கொலை செய்ததாக உத்திரகண்ணன் (22), மகேந்திரன் என்ற செல்வம் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சமீர்வியாஸ் நகரை சேர்ந்த இசக்கிமுத்து (21), மேலஅழகபாரியை சேர்ந்த மணிமுத்து மகன் மாரிமுத்து சூர்யா (24) ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர். அவர்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


