சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை சாஸ்தா கோவிலில் பூட்டை உடைத்து திருட முயன்றதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வடக்கு பன்னம்பாறை கீழத் தெருவைச் சேர்ந்த ரங்கசாமி (74), பன்னம்பாறை மருதமலை அய்யனார் சாஸ்தா, சுடலை ஆண்டவர் கோயில் தர்மகர்த்தாவாக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சாஸ்சா கோயில் கதவின் பூட்டுகளை உடைத்து ஒருவர் திருடமுயன்றுள்ளார்.
அப்போது ஆள் நடமாட்டம் இருந்ததால் அந்த நபர் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் காணாமல்போன பைக்கை தேடுவதாகக் கூறி அப்பகுதியில் சுற்றித் திரிந்தார். சந்தேகமடைந்த தர்மகர்த்தா ரங்கசாமி அளித்த தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன், போலீசார் சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
அவர் விளாத்திகுளம் வேம்பார் மேலத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் முத்துராமன் (35) என்பதும், சாஸ்தா கோயிலில் திருட முயன்றது தெரியவந்தது. மேலும், அவர் மீது மதுரை, குளத்தூர், சூரங்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, திருட்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


