தட்டார்மடம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தாய், 2 மகன்களைத் தாக்கியதாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே வாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பால்தங்கம் (50), பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயகுமார் (50) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்காக விஜயகுமார் குடும்பத்தினர் திருப்பூரிலிருந்து இங்கு வந்தனர். அப்போது, இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாம்.
விஜயகுமார், அவரது மகன்கள் விசுவா, விஷால் ஆகியோர் சேர்ந்து பால்தங்கம், அவரது மகன்கள் சுடலைமணி, சுரேஷ் ஆகியோரை கல், கம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பால்தங்கம் அளித்த புகாரின்பேரில், தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னு முனியசாமி வழக்குப் பதிந்து விஜயகுமார், விசுவா ஆகியோரைக் கைது செய்தார்; விஷாலை தேடி வருகிறார்


