குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நள்ளிரவு சூரசம்காரம் நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உட்பட தென்காசி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாநகரத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள்/காவல் துணை ஆணையர் தலைமையில் 10 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 46 காவல் உதவி/ துணை கண்காணிப்பாளர்கள், 117 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்பதால், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், போக்குவரத்து வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், இதர துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு, போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


