தூத்துக்குடியில் காளி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் எஸ். இசக்கி முத்துக்குமார் வெளியிட்டுள்ள அளிக்கையில், “இந்து முன்னணி சார்பில் நடைபெறும் தசரா நவராத்திரி திருவிழா உற்சவத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 26.09.2025 அன்று மாலை தூத்துக்குடி இசக்கி அம்மன் கோவில் முன்பிருந்து தூத்துக்குடி சிவன் கோவில் வரை மாபெரும் காளி ஊர்வலத்தை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக தூத்துக்குடி நகர காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அவர்களிடம் முறையான அனுமதி பெற வேண்டி கடந்த 10.09.2025 அன்று இந்து முன்னணி சார்பில் மனு அளித்திருந்தோம். அதில் எவ்வித அறிவுறுத்தலும் பெறப்படாத நிலையில் மேல் அனுமதிக்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் கடந்த 16.09.2025 அன்றும் காளி ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி சார்பில் மனு அளித்திருந்தோம்.
இந்நிலையில் காவல்துறை சார்பில் எங்களுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி 26.09.2025 அன்று காளி ஊர்வலத்திற்காக பல்வேறு தசரா குழுக்கள் காளி மற்றும் அம்மன் வேடங்களில் நகர்வலம் வர தயார் நிலையில் காத்திருந்த வேளையில் திடீரென மாவட்ட காவல்துறை சார்பில் இந்து முன்னணி நடத்தும் காளி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் அளிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாநகரில் காவல்துறை இந்து எழுச்சிக்காக நடத்தப்படுகின்ற ஒவ்வொரு விழாக்களிலும் இந்து முன்னணி மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தும் அனுமதியை மறுத்தும் ஒவ்வொரு முறையும் நடவடிக்கை மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நாடெங்கும் தசரா திருவிழா நவராத்திரி பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள இந்து மக்கள் மாலை அணிவித்து கடுமையான விரதம் மேற்கொண்டு வேடமனிந்து குலசேகரப்பட்டினம் நகருக்கு சென்று முத்தாரம்மன் அருளை பெறுவர். அப்படிப்பட்ட பக்தர்களை இந்து முன்னணி சார்பில் ஒருங்கிணைத்து தூத்துக்குடி நகரில் காளி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதியை வழங்காமல் நாளை கடத்தி விழா ஏற்பாட்டுக்கு முன்னர் அனுமதி மறுத்து செய்தி வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மாற்றான் தாய் மனப்பான்மையுடன் இந்து விழாக்களுக்கு மட்டும் காவல்துறை கடுமையான நிபந்தனைகளை விதிப்பதும் அனுமதியை மறுப்பதும் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது வேதனை அளிக்கிறது. தூத்துக்குடி நகர காவல் துறையின் இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். எனினும் இந்து தர்மம் வெல்லும் இந்து எழுச்சி ஏற்படும் இந்து முன்னணி அதற்காக தொடர்ந்து பாடுபடும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


