சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் மேல்நிலைத் தேக்கத்தொட்டி இடிப்பு பணியின் போது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலும் உடைந்து அரசுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் இன்று பழைய மேல்நிலைத் தேக்கத்தொட்டி (OHT) இடிப்பு பணிகளில், ஒப்பந்ததாரரின் கவனக்குறைவால் அருகிலுள்ள மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் தரை மட்டமாக விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்தன மற்றும் அரசு சொத்து சுமார் ₹10,00,000 மதிப்பில் நாசம் ஆனது.
இதன் விளைவாக ஊராட்சி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, மக்கள் அடிப்படை உரிமையை இழக்க நேரிட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கூறுகையில், “சேதமடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தையும் இயந்திரங்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும், ஏற்படும் நஷ்டத்திற்கான முழுமையான ஈடு ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் பொதுச் சொத்துக்கள் பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்கள் நலனுக்காக சட்டரீதியான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.


