மாணவர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பை படிக்கின்ற பொழுது உங்களின் அடுத்த தலைமுறையை சார்ந்தவர்களின் மொத்த வாழ்க்கையும் மாறும்” என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் இன்று (23.09.2025), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிகல்வித்துறை இணைந்து நடத்திய உயர்வுக்கு படி இரண்டாம் கட்ட முகாமில், கோவில்பட்டி, கயத்தார், விளாத்திக்குளம் மற்றும் புதூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை ஆர்வமுடன் பயின்று 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துரையாடி, தொழிற்கல்விப்படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி கல்வி படிப்புகள், கல்லூரிகளை தேர்வு செய்தல், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: நமது தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த முயற்சியான உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த மே மாதம் மாவட்டத்திலுள்ள பள்ளியின் ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டல் ஆசிரியர்களுடன் நடைபெற்று வருகிறது. இது நமது மாவட்டத்தின் இறுதிகட்ட நிகழ்ச்சியாகும்.
நமது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி பயில்வதற்கு சேர வைப்பதில், கடந்த 5 மாதங்களாக பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து பல்வேறு வகையில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக, நமது மாவட்டத்தின் உயர்கல்வி சேர்ந்த மாணவர்களின் சராசரி சதவீதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 95 சதவீதம் எட்டியுள்ளது. சுமார் 20 பள்ளிகள் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் 100 சதவீதத்தை எட்டியுள்ளது.
நமது மாநிலம் கல்விக்காக தனி முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. அதற்காக அனைத்து பெற்றோர்களும் கல்விக்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். 1960 ஆம் ஆண்டுகளில் காமராஜர் அவர்களின் காலகட்டத்தில் ஒவ்வொரு ஊர்களிலும் தொடக்கக்கல்வியை விரிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஊர்களிலும் தொடக்கக்கல்வியையும், பள்ளிக்கூடங்களையும் தொடங்கி வைத்தார்கள்.
அதன் அடுத்த கட்டமாக 1970 ஆம் ஆண்டுகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டது. 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் நமது மாணவர்கள் வாய்ப்புகளை தேர்ந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர்களிலும் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி போன்ற பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இவ்வாறு தொடங்கப்பட்ட கல்லூரிகளில் ஆரம்ப கால கட்டத்தில் சேர்க்கை சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது,
பின்னர் இது கல்லூரி பயிலுகின்ற மாணவர்களின் பயண கட்டணச் சுமையை குறைப்பதற்காக கட்டணமில்லா பேருந்து பயண அட்டை கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. சமூக நீதி விடுதிகள் உள்ளிட்ட விடுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பாக அனைத்து மாணவர்களும் தங்கி பயிலுவதற்கான விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதிகளில் பயிலுகின்ற மாணவர்களுக்கான சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல உதவிகள் செய்து, உயர்கல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். 2023ஆம் ஆண்டு நான் முதல்வன் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும், மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு கல்லூரியில் சேர்ந்து பயிலுகின்றனரா? மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொண்டு, உயர்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டியாக எடுத்துச் செல்லுகின்றமோ? என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்ற பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக பங்காற்றுகின்றனர்.
மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற பொழுதே மாணவர்கள் என்ன படிக்க வேண்டும்? எந்த கல்லூரிக்கு சென்றால் நீண்ட வாய்ப்புகள் கிடைக்கும்? எந்த படிப்புகள் படித்தால் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும்? என்பதை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, கல்லூரி சேர்ப்பது வரை இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டப்படுகிறது. இது போன்ற திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. நமது மாநிலத்தில் மட்டும் ஒவ்வொரு மாணவர்களின் கல்லூரி படிப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தான், நாம் உயர்கல்வியில் 95 சதவீதத்தை எட்டியுள்ளோம். படித்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர்களாக, பொறியாளராக, மருத்துவர்களாக படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சிகளை மேற்கொண்டு கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். இங்கு ஆசிரியர்களாக உள்ள அவர்களின் பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, இன்றைக்கு வழிகாட்டியாக உங்களுக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
நமது பெற்றோர்களுக்கு கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள் அந்த காலகட்டத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு உங்களுக்கு கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை மாணவர்களாகிய நீங்கள் தவறவிட்டால், எதிர்கால சந்ததியினர்களான உங்கள் குழந்தைகள் உயர்கல்வி கற்காத நிலை ஏற்படுவதற்கு காரணமாகிவிடுவீர்கள்.
உயர்கல்வி படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்க்கின்ற விதத்தில் வேறுபாடு உள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு சேராமல் இருக்கின்ற குழப்பத்திலிருந்து நீங்கி, மாணவர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பை படிக்கின்ற பொழுது உங்களின் அடுத்த தலைமுறையை சார்ந்தவர்களின் மொத்த வாழ்க்கையும் மாறும். இல்லையென்றால், இந்த வாழ்க்கை மாறவே மாறாது.
நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துகின்ற பொழுது, எதிர்கால தலைமுறையினர்களின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். படித்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். அதுபோன்று ஒரு நல்வாய்ப்பை எந்த நேரத்திலும் நீங்கள் தவறவிடக்கூடாது. நீங்கள் எல்லாரும் படித்தால் மட்டுமே கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள முடியும். எனவே, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியில் சேர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கோவில்பட்டி ஹிமான்ஷ் மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், முதன்மை கல்வி அலுவலர் (பொ) சிதம்பரநாதன், உதவி இயக்குநர், தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டு கழகம் ஏஞ்சலா, கோவில்பட்டி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


