சாத்தான்குளம் அருகே பெண்ணை அவதுறாக பேசித் தாக்கியதாக கோழிப் பண்ணை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த குருசாமி மனைவி மகராசி (45). அதிசய மணல் மாதா ஆலயப் பணியாளரான இவர், கடந்த 19ஆம் தேதி ஆலயத்தில் நின்றிருந்தார். அதே பகுதியில் கோழிப் பண்ணை வைத்துள்ள சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த தாமஸ் அங்கு வந்து, வேலை செய்வது தொடர்பாக மகராசியைக் கண்டித்தாராம்.
இதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, மகராசியை தாமஸ் அவதூறாகப் பேசி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மகராசி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்பேரில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்தார். சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் விசாரணை நடத்தி தாமஸை கைது செய்தார்.


