கோவில்பட்டியில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கூடுதல் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் லாரிகள், சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமான கன்டெய்னர் லாரியை திருவேங்கடம் அருகே உள்ள கொலக்கட்டாங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். இவர் கன்டெய்னர் லாரியில் தூத்துக்குடியில் இருந்து அட்டை ஏற்றி கொண்டு சென்று சிவகாசியில் இறக்கிவிட்டு, மீண்டும் தூத்துக்குடி செல்வதற்காக கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தார்.
நேற்று மதியம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் அருகே சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணியளவில் லாரியின் முன்பகுதி மற்றும் டயர்களில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதை தொடர்ந்து மதுரை-நெல்லை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் கோவில்பட்டி தீயணைப்பு துறை வீரர்கள் 2 வண்டிகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நுரை கலந்த தண்ணீரை லாரியில் பீய்ச்சி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சுமார் அரை மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பலத்த காற்று வீசியதால் தாழ்வாக சென்ற ஒயர் கண்டெய்னர் லாரி மீது உரசி தீ பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


