சுபமுகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. இதனால் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. விடுமுறை தினத்தையொட்டி நேற்று திரளான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் முன்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கூட்டம் அதிமாக இருந்தது.
அவர்கள் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணமக்களுடன் செல்பி எடுத்து கொண்டனர். திருச்செந்தூர் கோவில் வளாகம் மட்டுமின்றி சன்னதி தெரு, ரதவீதிகள், முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் ஏராளமான திருமணம் நடைபெற்றது.


