கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக கத்தி, பிளேடால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஊருணி 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனியசாமி (55). இவரது மகன் ராகுல்காந்தி (27). தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ராகுல்காந்தி கத்தி, பிளேடால் முனியசாமியை சரமாரியாக அறுத்து கொலை செய்தார். பின்னர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் சென்ற ராகுல்காந்தி, குடும்பத் தகராறு காரணமாக தந்தை முனியசாமியை கொலை செய்துவிட்டதாகக் கூறினார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜகநாதன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்


