மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைதான தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய்க்கு வரி முறைகேடு நடந்துள்ளது. இவ்வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், கைதாகி சிறையில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ் குமாரின் ஜாமீன் மனு மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி, வணிக வளாகத்திற்கு இருந்த வரி பாக்கியை இல்லாமல் செய்து பணம் பெற்றுள்ளார். தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


