தொழில்நுட்பம் வளர்கின்ற பொழுது அடுத்த கட்டத்திற்கு நம்மையும் தயார் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஸ்டெம் பார்க்கில் இன்று (13.09.2025) மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களின் தினசரி நிர்வாகத்திற்கு உதவிடவும், மக்களின் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணவும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாவட்டத்தில் உள்ள மாதிரிப் பள்ளிகள் உட்பட பல்வேறு பள்ளிகளில் இப்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து புரிந்து கொள்ளவும், அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். இப்பொழுதும் அமைச்சர் உறுதுணையுடன், மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உதவியுடன் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து திறன் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் மூலம் அவர்களது வேலைகளை எளிதாகவும், சிறப்பாகவும் செய்வதற்கு உதவியாக அமையும் என நம்புகிறேன்.
முதன் முதலில் Information Technology Policy–யை கொண்டு வந்தது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தான். ஆகவே, தொழில்நுட்பம் வளர்கின்ற பொழுது அடுத்த கட்டத்திற்கு நம்மையும் தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்வில் மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்ட செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


