அனைவரும் கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதை விடுத்து, புத்தகம் வாசிப்புக்கு அதிக நேரம் செலவிட வேண்டும். அது வாழ்வை மேம்படுத்தும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடர்ந்து படி தூத்துக்குடி’என்ற தலைப்பிலான 6ஆவது புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். புத்தக கண்காட்சியைத் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்ட சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், பின்னர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்களை நடத்த அறிவுறுத்தினார். அதன்பேரில், நடைபெறும் இத்திருவிழாவில், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதை விடுத்து, புத்தகம் வாசிப்புக்கு அதிக நேரம் செலவிட வேண்டும். அது வாழ்வை மேம்படுத்தும் என்றார்.
ஆட்சியர் க.இளம்பகவத் பேசுகையில், புத்தகத் திருவிழாவில், முக்கிய இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கவுள்ளனர். மாணவர்களுக்கு 13 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. உண்டியல் மூலம் பணம் சேகரித்து அதிக புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டிகளில் வெல்வோருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நூல்கள் பரிசளிக்கப்படவுள்ளன என்றார்.
மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், கூடுதல் ஆட்சியர் இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், கூடுதல் எஸ்பி மதன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், கோவில்பட்டி உதவி ஆட்சியர் ஹீமான்ஷீ மங்கள், கோட்டாட்சியர் ம.பிரபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலர் சிதம்பரநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா. நவீன்பாண்டியன், பபாசி செயலர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்


