நெல்லை அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்த தூத்துக்குடி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தைச் சேர்ந்தவர் வேம்பன் மகன் கணேசன் (29). இவர் நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தாழையூத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவருடன் மற்றொருவரும் சென்றார்.
பொட்டல்விலக்கு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கணேசன் உள்ளிட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் கணேசன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றுகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


