தூத்துக்குடியில் தாசில்தார் வீட்டில் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், டி.வி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற தாசில்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம். இவருடைய மனைவி சந்திரா (65). கணவர் இறந்த பிறகு, சந்திரா ஓசூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டாராம். அவ்வப்போது ஊருக்கு வந்து வீட்டில் தங்கி இருந்து விட்டு மீண்டும் ஓசூருக்கு செல்வது வழக்கம். அவர் வீட்டில் இல்லாத போது, பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் வீட்டை கவனித்து வந்தாராம்.
இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சந்திரா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த தங்க நகைகள், டி.வி மற்றும் ரொக்கப்பணத்தையும் திருடி சென்று விட்டார்களாம். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையை வைத்தும் ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அதன்பேரில் தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை தெருவை சேர்ந்த டொமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33), அழகேசபுரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல்ராம் (22), ராமேதேவன் (24), தபால் தந்தி காலனியை சேர்ந்த காட்டுராஜா மகன் முத்து என்ற முத்துகூடா (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு மோட்டார் சைக்கிள், டி.வி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


