தூத்துக்குடியில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதால் விபத்து ஏற்படுகிறது. சாலைகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி நகர் முழுவதும் நடைபாதைகளை மறைத்தும், மின்கம்பங்கள், சிசிடிவி கேமரா கம்பங்களில் இந்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் முறையாக கட்டாமல் சாலையோரம் சாத்தி வைக்கப்பட்டுள்ள போர்டுகள் காற்றில் பறந்து விபத்துக்களை ஏற்படுகின்றன. இதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்டபோது மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். எனவே, விபத்து எதுவும் ஏற்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


