தூத்துக்குடி மாநகராட்சியில், 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 100 அடி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் பேசிய மேயர், “தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. சாலைகள், தெருவிளக்கு, பூங்கா உள்ளிட்ட அனைத்து பணிகளும் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய சாலைகள் பசுமை சாலைகளாக மாற்றப்பட உள்ளது. பொதுமக்கள் கேரி பேக் பயன்டுத்த மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
பின்னர் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்திரலால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய 6 பேருக்கு பாராட்டு சான்றிதழ், மற்றும் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் 64 பேருக்கு மேயர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில், மாநகராட்சி துணை ஆணையர் சரவணபெருமாள், மாநகர துணை பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் சரோஜா, நிர்வாகப் பொறியாளர் காந்திமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டான்லி ராஜசேகரன், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பால குருசாமி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், கனகராஜ், வைதேகி, முத்துவேல், ரங்கசாமி, மும்தாஜ் எடின்டா, சுரேஷ் குமார், ராமகிருஷ்ணன், சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


