கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் புதிதாக கட்டப்பட்ட முதன்மை நிலை ஹாக்கி விளையாட்டு மையத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் புதிதாக கட்டப்பட்ட முதன்மை நிலை ஹாக்கி விளையாட்டு மையத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து விளையாட்டு மையத்தில் கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ, சார் ஆட்சியர் ஹிமான்சு மங்கல், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன், மாவட்ட விளையாட்டு – இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்ட ராஜ், சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். அங்கு கல்வெட்டு திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரி துணை முதல்வர் ஜோசப் சுரேஷ், ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், அதிமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இம்மையத்தில் மாணவர்கள் தங்கும் அறை, சிகிச்சை அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
ஆலயத்திற்கு நிதி: முன்னதாக, கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா சிறப்பு திருப்பலியில் பங்கேற்றார். அப்போது, அவர் பேராலய பங்குத் தந்தை மோயீசனிடம் தனது சொந்த நிதியிலிருந்து உயர் கோபுரம் மின்விளக்கு அமைக்க ரூ.2 லட்சம் வழங்கினார்.


