வாய்ப்புகளை பயன்படுத்தினால் எதிர்காலம் எளிதாகுமென முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சியில் மாணவர், மாணவிகள் வாழ்வில் உயர்வை அடைய ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திரபாபு கலந்துகொண்டு பேசியதாவது: மாணவர்களிடையே பகுத்தறிவு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு என்று மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளன.
குறிப்பாக கடல் கடந்து வணிகம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 339 பில்லியன் டாலர். தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயர்வுக்கு காரணம் பெண்கள் தான். தமிழ்நாடு அரசு, மாணவர்களுக்காக பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
மேலும், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை எனில் எதிர்காலம் கடினமானதாகி விடும். நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் பெ.பிரேமலதா, காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி, ஆசிரியர்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


