கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மையம் கட்டுவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், மூப்பன்பட்டி ஊராட்சியில் இன்று (30.07.2025) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் நவீன இயந்திரங்களுடன் கூடிய கடலைமிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மையம் கட்டுவதற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது : புவிசார் குறியீடு பெற்று தரத்திலும், சுவையிலும் உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதலையும், வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது உற்பத்தி திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ‘கோவில்பட்டி பகுதியில் கடலைமிட்டாய் உற்பத்தி குறுங்குழுமம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து நவீன இயந்திரங்களுடன் கூடிய மூலப்பொருட்களைத் தரம் பிரிக்கும் கூடம், கடலைமிட்டாய் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் கூடம், உணவுப்பொருட்கள் பகுப்பாய்வுக் கூடம், ஆகியவற்றை அமைப்பதற்காக குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.713.22 இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.
மொத்த திட்ட மதிப்பீட்டில் 90% தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு மீதமுள்ள 10% கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் முதலீடு செய்யப்பட்டது. இந்த பொது வசதி மையம் அமைவதால் கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 100 குறு மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பும், ஆண்டிற்கு 60 கோடி வருவாயும் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில்பட்டி கடலைமிட்டாயின் நேரடி ஏற்றுமதி வருவாயும் தற்போதைய அளவிலிருந்து 5 மடங்கு அதிகரிக்கும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகரமன்றத் தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா, தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


