திருச்செந்தூர் கோவிலுக்கு தொழிலதிபர் சிவநாடார் வழங்கிய நிதியைத் தவிர்த்து, மீதமுள்ள ரூ.200 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.400 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
இக்கோயில் திருப்பணிகளுக்காக திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவ நாடார் ரூ. 200 கோடி வழங்கியுள்ளார். திருக்கோயில் நிர்வாகம் ரூ.100 கோடி செலவு செய்கிறது. தற்போது கூடுதலாக ரூ.100 கோடி செலவிடப்படும் என்கின்றனர். தொழிலதிபர் சிவநாடார் வழங்கிய நிதியைத் தவிர்த்து, மீதமுள்ள ரூ.200 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தற்போது இக் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம், பாலை முறையாகக் காய்ச்சி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் படிக்க உள்ளனர்.
இம் மாநாட்டிற்காக, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் தங்களது சொந்த நிதியை செலவிட்டு வருகின்றனர். இப்படியிருக்க, மாநாட்டிற்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறுவது கண்டனத்துக்குரியது என்றார். பேட்டியின்போது இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பெ.சக்திவேலன், திருச்செந்தூர் நகர தலைவர் மு.முத்துராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்


