கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் பிரகதீஸ்வரன் (22), இவர் நேற்று இரவு 11 மணி அளவில் கடலையூர் ரோட்டில் உள்ள ஒரு மதுபான டாஸ்மார்க் கடை அருகில் நடந்து வந்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மற்றொரு கொலை
கோவில்பட்டி செண்பகா நகர் 3வது தெருவைச் சேர்ந்த ஆனந்த் மனைவி கஸ்தூரி (45) என்பவரை வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது அண்ணன் செண்பகராஜ் (50) என்பவரையும் மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஸ்தூரி உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டியில் ஒரே நாளில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து ஆண் மற்றும் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கொலையை செய்தது ஒரே கும்பலா அல்லது தனித்தனி கும்பலா? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைகள் நடந்த இடத்தை டிஎஸ்பி ஜெகநாதன் நேரில் பார்வையிட்டு 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்.


