தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 2ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் கோடை விடுமுறைக்கு பின்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளி கட்டிடங்களின் மேல் தேங்கி உள்ள குப்பைகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
குடிநீர் தொட்டிகள், வகுப்பறைகள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதே போன்று பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பள்ளிக்கூடம் திறக்கும் நாளில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


