தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் திருடியதாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் 6ஆவது தளத்தில் காற்றாலை இறக்கைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் தனியார் நிறுவனத்தினர், இறக்கைகளை சேமித்து வைத்திருந்தனர். அங்கு காற்றாலை இறக்கைளை லாக் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய சுமார் 20 கிலோ எடையிலான இரும்பு பூட்டு காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து தெர்மல்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அருண் பாண்டியன் (24) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


