பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதலமைச்சர் அவர்களால் சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. எனவே இவ்விருதுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் விதிமுறைகளை பூர்த்தி செய்பவராக இருத்திடல் வேண்டும்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, தாங்கள் செய்த சேவை குறித்த உரிய விவரங்கள், நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்கள், போன்ற முழு விபரங்களுடன் 12.06.2025-க்குள் விண்ணப்பித்து அதன் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.


