தூத்துக்குடியில் வீட்டிற்குள் கதவை பூட்டிக் கொண்டு தவித்த 3 வயது சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி கேவிகே நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் தாதா பீர். ஆயுதப் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது 3 வயது ஆண் குழந்தை அபுபக்கர் இன்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் உள் அறைக்குள் தனியாக சென்று கதவை பூட்டிக் கொண்டான். பின்னர் சிறுவனால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் வெளியில் வர முடியாமல் உள்ளே இருந்து சிறுவன் கூச்சலிட்டான்.
இதனால் தாயார் வெளியில் நின்றபடி கதறினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து அந்த கதவை உடைக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கதவை உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களின் துரித சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


