தூத்துக்குடியில் பலத்த காற்று வீசிவருவதால் ரோட்டில் புழுதியை வாரி இறைத்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு மத்திய மராட்டியம் மற்றும் அதனை ஒட்டிய மரத்வாடா, வடக்கு உள் கர்நாடகாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 27-ந் தேதி உருவாகக்கூடும். இதனால் நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதே நேரத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ரோட்டில் புழுதியை வாரி இறைத்தது. பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் கீழே சாய்ந்தன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காற்று வீசியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மாலை நேரத்தில் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.


