தூத்துக்குடியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி / தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாகத் தலைவர் நீதியரசர் ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (24.05.2025), மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி / தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாகத் தலைவர் நீதியரசர் ஆர்.சுப்பிரமணியன் தலைமையில், தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் D.லிங்கேஸ்வரன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட நீதிபதி / மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் K.சுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சயில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி / தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாகத் தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த அருமையான நிகழ்ச்சிக்கு வருகைதந்துள்ள அனைவருக்கும் எனது காலை வணக்கம். சட்டப்பணிகள் ஆணைக்குழு என்பது 1987ஆம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலமாக நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடி நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சரத் 39A 1976ஆம் ஆண்டு 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு, முதன்முதலாக இலவச சட்ட உதவி என்ற ஒரு கோட்பாடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது.
1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும் படிப்படியாக முன்னேறி 1984, 1985ஆம் ஆண்டுகளில் முழு உருவம் பெற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்பின்னர், அவைகளை ஒழுங்குபடுத்துவதற்கு 1987ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் பல விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக இலவச சட்ட உதவி பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டுவருகிறது. அக்குழுவின் மூலமாக வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்குகளை நடத்துகிறார்கள். இதுபோன்ற பல விதமான சட்ட உதவிப் பணிகள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒருபகுதியாக, இன்றையதினம் பெண்களின் முன்னேற்றத்திற்காக சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலமாக நவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று மருத்து சேவை அளித்து, குணப்படுத்துவதற்கு தேவையான மருந்துப்பொருட்களை வழங்கக்கூடிய சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு துறைகளின் சார்பிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தாட்கோ, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாகவும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. அந்தவகையில், மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றையதினம் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் அனைவரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளது என்று உங்களுடைய உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே எடுத்துக்கூறி அவர்களையும் பயனடைசெய்ய வேண்டுமென அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி / தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாகத் தலைவர் நீதியரசர் ஆர்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50 இலட்சம் மதிப்பிலான செயற்கை சுவாசக் கருவிகள், இ.சி.ஜி இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,18,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.80,995 மதிப்பிலான திறன் பேசிகளையும், நீதித்துறையின் சார்பில் 30 மகளிர்களின் சுயதொழில்களுக்காக ரூ.6,42,840 மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய நவீன தையல் இயந்திரங்களையும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு ரூ.26 இலட்சம் இழப்பீட்டுத் தொகைகளுக்கான உத்தரவுகளையும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3,50,000 மானியத்துடன் கூடிய ரூ.24,05,563 மதிப்பிலான பயணியர் வாகனங்களுக்கான சாவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.1,31,833 மானியத்தில் ரூ.3,76,666 மதிப்பில் அழகு நிலையம் அமைப்பதற்கான காசோலையையும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 10 கர்ப்பிணிபெண்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 10 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினை குணப்படுத்துவதற்கான மருந்துப் பெட்டகங்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.8500 மானிய விலையில் பேட்டரி தெளிப்பான்களையும், 3 விவசாயிகளுக்கு ரூ.20,800 மானிய விலையில் தார்ப்பாய்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10,958 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 10 பயனாளிகளுக்கு ரூ.47,200 மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும் நீதியரசர் ஆர்.சுப்பிரமணியன் வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை தொடங்கிவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் V.வினோத் சாந்தாராம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் ம.யாழினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஜெனிஷிஸ்.ம.ஷியா, தூத்துக்குடி மாவட்ட அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தண்டு நிறுவனத்தின் மேலாளர் வேல்முருகன், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.


