தூத்துக்குடியில் வங்கிக்குள் புகுந்து மேலாளரைத் தாக்கிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் பாரத் தேசாய், அதிகாரிகள் வீட்டுக் கடன் நிலுவைத் தொகை தொடர்பாக போல்பேட்டையைச் சேர்ந்த ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று விசாரித்தனராம்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சகோதரர் காமராஜ் உள்ளிட்ட சிலருடன் வங்கிக்கு திங்கள்கிழமை சென்று, மேலாளரைத் தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த மேலாளரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து புகாரின்பேரில், மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனர். ஜெயக்குமார் உள்ளிட்ட சிலரைத் தேடிவருகின்றனர்.


