கயத்தாறு அருகே மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து கிராமத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் சுப்பிரமணியன் (47). இவர் கங்கைகொண்டானில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று காலையில் வீட்டில் இருந்து கங்கைகொண்டானில் உள்ள டீக்கடைக்கு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அவர் நெல்லை-மதுரை நாற்கர சாலையில் சென்றபோது, எதிரே நாகர்கோவில் இருந்து மதுரைக்கு தனியார் நிதி நிறுவன மேலாளர் ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அந்த காரை மதுரையை சேர்ந்த சின்ன இருளன் மகன் சின்னகருப்பு(27) ஓட்டி வந்தார்.
கயத்தாறு அருகே தேவர்குளம் நாற்கர சாலையில் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் ஓட்டிச்சென்ற பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீ்ட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


