கோவில்பட்டி, கயத்தார், புதூர், கடம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
கோடை காலங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், கோவில்பட்டி, புதூர் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கடம்பூர், கயத்தார் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், இன்று (07.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வசித்துவரும் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு குடிநீர் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ளூர் நீர் ஆதாரம் மூலமாகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றையதினம் கடம்பூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றும் நிலையத்தையும், கயத்தார் ஊராட்சி ஒன்றியம் பன்னீர்குளம் ஊராட்சி மற்றும் தெற்குமயிலோடை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு மயிலோடை கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாக குடிநீர் விநியோக பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, கயத்தார் பேரூராட்சி பகுதிகளுக்கான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்து, குடிநீர் விநியோக பணியின் அளவீடு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தார். கயத்தார் ஊராட்சி ஒன்றியம் சவலாப்பேரி மற்றும் சிவஞானபுரம் ஊராட்சிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாக குடிநீர் விநியோக பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் கேட்டறிந்து, குடிநீர் வீணாகாமல் உரிய நேரத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்து, முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
அதுபோன்று, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் வில்லிசேரி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாக குடிநீர் விநியோக பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், வில்லிசேரி முகப்பில், சாத்தூர் நகராட்சி, கயத்தார், கழுகுமலை எட்டையபுரம் பேரூராட்சிகள் மற்றும் கோவில்பட்டி கயத்தார் ஊராட்சி ஒன்றியங்களின் 161 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயினை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நாலாட்டின்புத்தூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றும் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சாத்தூர் நகராட்சி மற்றும் கழுகுமலை, எட்டையபுரம் பேரூராட்சிகளுக்கு செல்லும் குடிநீர் அளவீடு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, புதூர் ஊராட்சி ஒன்றியம் காடல்குடி ஊராட்சி, சென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலவெங்கடேஸ்வரபுரம், கீழஅருணாசலபுரம் ஊராட்சிக்குட்பட்ட நடுக்காட்டூர், மாவிலோடை ஊராட்சிக்குட்பட்ட சின்னூர் மற்றும் இராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட K.சுப்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாக குடிநீர் விநியோக பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். நாகலாபுரம் முதல் கடல்குடி செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு பண்ணைக்குட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இடைசெவல் ஊராட்சியில் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் அவர்களின் நினைவாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து, பள்ளியின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து, கடம்பூர் மற்றும் சங்கராப்பேரி என்ற கோடங்கால் பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு இரயில்வே சுரங்கப்பாதைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருட்களின் இருப்பு குறித்தும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் விவரம், வழங்கப்படும் மருந்துகளின் வகைகள், பயன்பெற்று வரும் பயனாளர்களின் விவரம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். மேலும், கயத்தார் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கயத்தார் ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைக்குளத்திற்கு செல்லும் வழியான மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் பக்கவாட்டின் இருபுறமும் உள்ள அணுகு சாலையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், ஆய்வுசெய்து, சாலையை சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ராம்குமார், மகேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, வட்டாட்சியர்கள் சுந்தரராகவன் (கயத்தார்) சரவணப்பெருமாள் (கோவில்பட்டி), ராமகிருஷ்ணன் (விளாத்திகுளம்), மருத்துவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


