திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும். அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும். இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கூட பாலத்தின் இரு பகுதியையும் ரூபாய் 4 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து ஓராண்டுகள் கூட நிறைவடைவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்ட ஆரம்பித்தது. இதனால் பாலத்தில் இரண்டு பகுதிகளிலும் மாறி மாறி ஓட்டை ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து பாலத்தில் 8 முறை ஓட்டை விழுந்துள்ளது.
இதையடுத்து கடந்த வருடம் பாலத்தை சீரமைக்க சுமார் 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் நடந்து வந்தது.
இந்த நிலையில் நான்குவழிச்சாலையில் உள்ள தென்பகுதியின் ஒருபுறத்தில் பாலத்தின் மேல்தளம் தார்சாலை என அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தில் ஏற்கனவே சேதமடைந்த இடம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது.
நேற்று அதே இடத்தில் பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டது. இதனால் சாலையில் இருந்த ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து வெளியே வந்தது.
இதையடுத்து உடனடியாக அங்கு வந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் அங்கு வந்து சேதமடைந்த உடந்தை சுற்றி தடுப்பு அமைத்தனர். அதை தொடர்ந்து போக்குவரத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பாலம் சேதமடைந்த பகுதியின் கீழ் 100 க்கும் மேற்பட்ட பெரிய ஜாக்கிகள் கொண்டு தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. தொடர்ந்து முழுமையான திட்ட அறிக்கை தயாரித்து அதன் பிறகு மீண்டும் இந்த பாலம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கும் என தெரிகிறது.
இந்த சேதம் தொடரும் போது பாலத்தில் பெரிய பள்ளம் விழும் அபாயமும் உள்ளது. எனவே பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


