கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து பரோட்டா மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் பெருமாள் (48). ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களாக அவர், சரியாக வேலைக்குச் செல்லாததுடன், நாள்தோறும் மது குடித்துவிட்டு, இரவில் மொட்டை மாடியில் தூங்குவாராம்.
நேற்று முன்தினம் இரவு மது குடித்த நிலையில், வழக்கம்போல் மாடியில் தூங்கச் சென்றாராம். நேற்று காலை வீட்டு முன்புள்ள பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ள தெருவில் விழுந்து கிடந்தாராம். அவர் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உறவினர்களும், அப்பகுதியினரும் வந்து பார்த்தபோது, அவர் தலையில் அடிப்பட்ட நிலையில் இறந்திருந்தாராம்.
தகவலின்பேரில், போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


