தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பிறப்பினை முன்னிட்டு பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் நினைவாக தோரண மலையான் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் தமிழர் பண்பாட்டினை கடைபிடித்து வரும் விவசாயிகளின் கரங்களால் வழங்கப்பட்டு வருவதும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். இந்த ஆண்டிற்கான விருதுகள் அடிவாரம் சொக்கலால் கலையரங்கில் வைத்து நடைபெற்றது.
இதில் எளியோர்களுக்கு சிறப்பாக மருத்துவச் சேவையாற்றி வரும் மேலப்பாளையம் இசை மருத்துவர் டாக்டர் பிரேமச்சந்திரன், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி நூல்களை வெளியிட உதவி செய்து வரும் கலை பதிப்பகத்தின் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, அமைப்பின் மூலம் சிறந்த மரபுக் கவிஞர்களை உருவாக்கி வரும் திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் கவிஞர் ஜெயபாலன், நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வுக் கூட்டங்கள் நடத்தி வாசிப்பு மேன்மைக்கு சிறப்பாக பணியாற்றி வரும் மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் முத்துக்குமார், இணையதளத்தின் மூலம் சென்னை வாழ் நெல்லை மக்களின் பண்பாட்டு உறவுக்கு செயல்பட்டு வருகின்ற சங்கர் மணி, நலிவுற்ற நிலையிலும் சிறந்த தன்னம்பிக்கையாளராக வாழ்ந்து வருகின்ற தன்னூத்து செல்லத்துரை, மரம் வளர்க்கும் பணியில் சிறப்பான பணி செய்து வரும் செங்குளம் கருப்பசாமி, ரத்ததானம் வழங்குவதிலும் ஒருங்கிணைப்பிலும் சிறப்பாக செயலாற்றி வரும் பாக்கியராஜ், கிராம உதயம் அமைப்பின் மூலம் சமூகக் காடுகள் உருவாக்குவதில் முனைந்து பணியாற்றி வரும் வேல்முருகன், ஊடகங்களில் விவசாயத்தைப் பற்றி எளிமையாக கூறி வரும் பட்டங்காடு விவசாயிகள் தங்கதுரை மற்றும் மூன்று முடிச்சு தொலைக்காட்சி தொடரின் நடிகர்- நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கும் தோரணமலையான் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


