கலாராணி எதிர்பாரத விதமாக லோன்துரையின் கொலை வழக்கு குறித்து எழுத்தாளர் பெருமாள் கூற ஆரம்பித்தார்.
அந்த வரலாறு அவர்கள் கண் முன் விரிந்தது. முத்துக்கிருஷ்ணனும், கலாராணியும் ஆச்சரியத்துடன் அந்த வரலாற்றை கேட்க ஆரம்பித்தனர்.
தமிழகத்தில் பல இடங்களில் சுதந்திர போராட்ட தீ பற்றி எரிந்தது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திலும் அந்த தீ வேகமாக எரிந்துகொண்டேஇருந்தது. குறிப்பாக கடற்கரைபகுதியான குலசேகரபட்டினத்திலும் அதைச்சுற்றியுள்ள தேரிக்காட்டிலும் சுதந்திர போராட்டம் பற்றி எரிய காரணம் லோன் துரை எனும் மேலை நாட்டவர் நமது இந்தியர்கள் மீது காட்டிய கொடுமை.
அந்த கொடுமைத்தான், உடன்குடி பகுதியில் ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியது. லோன் துரை மேலைநாட்டுக்கு கப்பல் ஏற்ற வேண்டும் என்று மட்டும் நினைக்க வில்லை இந்தஉலகத்தினை விட்டே விரட்ட வேண்டும் என்று திட்டமிட்டனர், நம்மூர் தியாகிகள்.
நமது இந்திய திருநாட்டில் சுதந்திர போராட்டம் செய்தாலே பிடித்து உள்ளே வைத்து அவர்கள் வாழ்க்கையையே ஜோலி முடித்து விடுவார்கள். அப்படி வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் கொலை செய்தால் விடுவார்களா? ஆஷ் துரையை கொலை செய்த வாஞ்சி நாதன் நிலை என்னாச்சு. அவன் தானும் தற்கொலை செய்து இறந்து விட்டானே. அவரது நண்பர் செங்கோட்டையில் விரல் நகங்களை இழந்தார்களே. அப்படி இருக்கும் போது லோன் துரையை மட்டும் கொலை செய்ய இயலுமா?. அப்படி கொலை செய்து விட்டு நிம்மதியாக இருக்க முடியுமா?
ஆனால் லோன் துரையை கொலை செய்ய வேண்டும், அல்லது அவனை பயங்காட்டி நம்மை கண்டாலே நடுங்கி கொண்டு இருக்க செய்ய வேண்டும் என்று நினைத்தனர்.

உடன்குடி பகுதியில் உள்ள விடுதலை போராட்ட வீரர்களுக்கு லோன் துரை சம்பந்தமான விஜயங்கள் ஒரு சவலாகவே இருந்தது.
“சரி ஏன் லோன் துரையை கொலை செய்ய வேண்டும்”.
குலசேகரபட்டினத்தில் அப்போது உப்பளத்தொழில் மிகப்பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்த சமயம். கீழக்கிந்திய கம்பேனி தான் இந்த உப்பளத்தினை நடத்திக் கொண்டிருந்தனர். குலசேரபட்டினத்தினை சந்திப்பாக கொண்டு திருச்செந்தூர், திசையன்விளை உடன்குடிக்கு டிராம் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. இங்குள்ள பதனீர் எல்லாவற்றையும் சேகரித்து அதை சீனியாக்க பாரி எனும் ஆங்கிலேய கம்பேனியும் இயங்கி கொண்டிருந்தது. இங்கு உப்பளமும் மிகச்சிறப்பாக இருந்தது. குலசேகரபடினம் ஒரு சிறிய துறைமுகப்பட்டினம். குறிப்பாக சொல்லப்போனால் ஆண்டாண்டு காலத்துக்கு முன்பு குலசேகர மன்னர் காலத்தில் தலைநகராக செழித்து ஓங்கிய இடம். இவ்விடம் 2500 வருடங்களுக்கு முன்பு சங்க கால புராணங்களில் பாடப்படும் கொற்கை இதுதான் என்று கூறும் வரலாற்று ஆய்வாளர்களும் உண்டு.
அப்படிப்பட்ட சிறப்பான இடத்தில் லோன்துரை அமர்ந்திருக்கிறான். அங்குள்ள உப்பளத்துக்கு அவன் தான்பொறுப்பாளர்.
ஆங்கிலேயர்களுக்கே உரிய தோரணை. மழிக்கப்பட்ட மீசை. தொப்பி, அது கீழே விழாமல் இருக்க நாடிவரை மாட்டப்பட்டிருக்கும் கயிறு, அரை டவுசர், தேய்க்கப்பட்ட மேல்சட்டை என டிப் டாப்பாக இருந்தான். அதோடு மட்டுமல்லாமமம் எப்போது அவன் கையில் ஒரு துப்பாக்கி இருக்கும். வீட்டில் துப்பாக்கி குண்டு தாராளமாக இருக்கும்.அதோடு மட்டுமல்லாமல் இவனுக்கு காவலாளிகள் வேறு சிப்ட் மாற்றி இருந்துகொண்டே இருப்பார்கள்.
இவனுடைய பங்களா அங்கே தான் இருந்தது. அந்த பங்களாக்குள் சாதாரணமாக நுழைந்து விட முடியாது. அதற்கு பல அடுக்கு பாதுகாப்பு உண்டு. சுற்றி வேலியும் அமைக்கப்பட்டிருக்கும்.
எப்போதுமே துப்பாக்கியுடன் அலையும் அவன், வேலை செய்பவர்களை கொடுமை படுத்தினான். உப்பளத்தில் வேலைசெய்யும் அப்பாவி மக்களுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்தான். எனவே அவன் மீது சுதந்திர போராட்ட வீரர்கள் மிகவும் எரிச்சலுடன் இருந்தனர். நேரம் பார்த்து அவனின் கதையை முடிக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.

ஏற்கனவே உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளர்கள் அதிகம். அவர்கள் அனைவரும் அந்த கால கட்டத்தில் காந்தியின் தலைமையை ஏற்று சுதந்திர போராட்டத்தினை நடத்தி வந்தனர். சொல்லப்போனால் இந்த கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்டது. இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களெல்லாம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி மற்ற பகுதியில் வெகு விரைவாக வளர்ந்து கொண்டிருந்தது. 1935 வரை உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி சற்று குறைவாகத்தான் இருந்தது. நாடு விடுதலை பெற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் பலர் இவ்வூரில் இருந்தாலும் வீதிக்கு வந்து போராடும் அளவிற்கு துணிச்சல் இல்லாமல் இருந்தனர். விடுதலைப்போர் நடைபெற்ற கடைசிக் காலக்கட்டத்தில்தான் உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சி வளர்ந்தது. இந்த வேளையில் லோன் துரையின் தொந்தரவு வேறு அதிகமாக இருந்தது.
இந்த சமயத்தில் இவ்வூரில் விடுதலை போராட்ட வீரர் ஒருவர் தோன்றினார். தனது சொந்து, உழைப்பு பணம் அனைத்தையும் சுதந்திர போராட்டதிற்கே செலவழித்தார். இறுதி காலம் வரை மணம் முடிக்காமல் மக்களுக்காகவே வாழ்ந்த உன்னத தலைவர் அவர். படுக்கப்பத்தைச் சேர்ந்த ராமசாமி நாடார் என்பவர் மகன் மேகநாதன் என்ற இளைஞர் தான் அவர். உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டார். உருவத்தில் குள்ளமாக இருந்தாலும் அவருடைய எழுச்சிமிகு பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.
சிவந்த தோற்றத்தில், குள்ளமாக இருந்தாலும் வசிகர தோற்றம் கொண்டவர் மேகநாதன். எனவே தனது பூர்வீக சொத்தில் இருந்து வந்த பணத்தினை சுதந்திர போராட்டத்திற்காக அள்ளி வீசினார். சுமார் 16 வயதிலிருந்து 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பலரை இவர் குறிவைத்தார். அந்த இளைஞர்களும் மேகநாதனின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டனர். இதனால் உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சி வெகுவேகமாக வளரத் தொடங்கியது. இள ரத்தம் சூடு பறந்தது. அவர்களை போராட்டத்துக்கு தூண்டி விட்டார் மேகநாதன்.
அடிக்கடி கூட்டம் போடுவது, அவர்களுக்கு போராட் பயிற்சி கொடுப்பது. ஆங்கிலேய அரசை எப்படி ஆட்டங் காண வைப்பது என பல்வேறு வியூகம் அமைத்துக்கொண்டே இருந்தார் மேகநாதன்.
உடன்குடியில் புகையிலைக் கடை ஒன்றை நடத்தி வந்தார் சித்திரம் பிள்ளை. இவர் மேகநாதனுக்கு பல வகையில் உதவியாக இருந்தார். இவர் வித்தியாசமான செயல்களை அந்த பகுதியில் செய்து வந்தார். அவர் காங்கிரஸ் கட்சியை யாராவது புகழ்ந்து பேசினால் போதும் , உடனே 5 ரூபாயை அவர்கள் கையில் கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு காங்கிரஸ் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் சில இளைஞர்கள் காங்கிரஸை பற்றி பணத்துக்காக பேசலாம் என வருவார். இவரிடம் பேசி பணத்தையும் பெறுவர். அதன் பின் காங்கிரஸ் பற்றி அறிந்து, இங்கேயே நிரந்தரமாக தவம் கிடைக்க ஆரம்பித்து விட்டனர். இந்த சமயத்தில் மேகநாதன் நிறைய திட்டங்களை வகுப்பார். அவர் இட்ட ஆணையை நிறைவேற்றத் தங்களுடைய தொழில், குடும்பம் ஏன் உயிரையே தியாகம் செய்ய நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்வந்தனர்.
அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஆலந்தலையைச் சேர்ந்த ஏ.எஸ்.பெஞ்சமின், கொட்டங்காட்டைச் சேர்ந்த ஏ.டிகாசி, கதிர் பிரகாஷ் என்ற ரெத்தினசாமி. சீர்காட்சியைச் சேர்ந்த கனி நாடார், செல்லத்துரை. ஜி.நாராயணன், சந்தையடியூரைச் சேர்ந்த எஸ்.ரெத்தினசாமி, க.பொன்னையா நாடார். பொ.தேவயிரக்கம் நாடார். தேரியூரைச் சேர்ந்த வ.மந்திரம், ஏ.எஸ்.தங்கையா நாடார், வி.ஆறுமுகநாதன். காலங்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பூவலிங்கம். அ.ஆதித்தன், உடன்குடி பி.எஸ்.எம்.புகாரி, இரா.தங்கையா, பி.சரவணப்பெருமாள். மாதவன் குறிச்சியைச் சேர்ந்த நெல்லையப்பன், ஜி.இ.முத்து, தண்டுபத்தைச் சேர்ந்த ஆர்.செல்லத்துரை, வே.ஆறுமுகநயினார். சு.லெட்சுமண நாடார் செட்டியாபத்தைச் சேர்ந்த மு.அருணாச்சலம் நாடார், எம்.ராமசாமி. பி.சிவசுப்பிரமணிய ஆதித்தன் நாடார். குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த வி.காளியப்பன். மருதூர் கரையைச் சேர்ந்த காத்தக்குட்டி, படுக்கப்பத்தைச் சேர்ந்த மங்களா பொன்னம்பலம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மேகநாதனின் தலைமையின் கீழ் வந்தனர். இத்தகைய இளஞ்சிங்கங்களைத் தன்வசம் வைத்திருந்த மேகநாதன் மிகவும் உற்சாகமாக இருந்தார்.
இவர் இளைஞர்களை யெல்லாம் ஒன்று திரட்டி நள்ளிரவில் காட்டிற்குள் இரகசியக் கூட்டம் நடத்துவது வழக்கம். அப்போது மேகநாதன் உணர்ச்சி பொங்கப் பேசுவார். அது இளைஞர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் இல்லாத இளைஞர்கள் கூட ஏதேச்சையாக மேகநாதனின் பேச்சைக் கேட்டுவிட்டால் உடனே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுவார்கள். அவரது பேச்சில் அவ்வளவு ஈர்ப்பு இருந்தது.
இத்தகைய பெருமைக்குரிய மேகநாதன் ஆழ்ந்து சிந்தித்து சூழ்ச்சிகள் செய்வதில் வல்லவர். பல இளைஞர்களைத் தூண்டி விட்டு பல போராட்டங்களை நடத்துவார். ஆனால் காவலர்கள் கையில் சிக்கவே மாட்டார். காவல் துறையினரோ உடன்குடியில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மேகநாதன்தான் காரணம் என்பதை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அவரை பிடிக்கவே முடியாது.
மேகநாதன் இளைஞர்களுக்கு முக்கிய திட்டங்களை தீட்டிக்கொடுப்பார். குறிப்பாக அவர் கள்ளுக் கடைகளுக்குத் தான் தீவைக்க கூறுவார்.
“எந் நாட்டு மக்கள் கள்ளுக்கு அடிமையானால், அதன் பின் அவர்களை அதில் இருந்து மீட்கவே முடியாது. எனவே மற்ற நலன்களை அறியமாட்டார்கள். இதற்காகவே ஆங்கிலேயர்கள் கள்ளுக்கடையை திறந்து விட்டு இருக்கிறார்கள். நமது மக்கள் அறிவை குழப்புவதற்காகவே இந்த கள்ளுக்கடையை திறந்து வைத்து இருக்கிறார்கள். எனவே அந்த கடைகளை கொளுத்துங்கள். அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள்” என இளைஞர்களை துண்டி விடுவார்.
இளைஞர்கள் வெகுண்டு எழுந்தனர். அரசு நடத்தும் கள்ளுக்கடைக்கு தீ வைத்தனர். இந்த தகவல் அரசுக்கு தெரிய கூடாது என தந்திக்கம்பங்களை அறுத்தெறிந்தனர். இதனால் அரசு ஸ்தம்பித்து போனது.
போலீசார் மேகநாதன் மீது மிகவும் கோபமடைந்தனர். அவர் மீதும் அவருடைய தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து மேகநாதனைக் கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் மேகநாதன் தலைமறைவாகி விடுவார்.
லோன் துரையை கொலை செய்ய வேண்டும் என்று முதலில் யாரும் நினைக்கவில்லை. ஆனால் நமது மக்களை கொடுமை படுத்தும் அவனை அதட்டி ஒடுக்கி வைக்க வேண்டும் எனத்தான் போராட்ட காரர்கள் நினைத்தனர். அவன் துப்பாக்கியை பறித்து, அவனை நிர்கதியாக்க வேண்டும் என்று தான் திட்டம் தீட்டினார்கள். ஆனால் அங்கு நடந்ததோ வேறு விதமாக இருந்தது.
1942-& ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆ-ம் நாள் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்திஜி ‘செய் அல்லது செத்துமடி’ என இந்தியர்களுக்கு ஒரு ஆணையை வெளியிட்டார்.
இது இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த வெள்ளையனை விரட்டுவோம். இல்லையென்றால் செத்து மடிவோம் என முடிவு செய்தனர்.
அதே வேளையில் காந்தியடிகள் “வெள்ளையனே வெளியேறு” என வெள்ளையர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார். இளைஞர்கள் வெள்ளையர்கள் வெளியேறாவிடில் நாம் விரட்டியடிப்போம் என முடிவு செய்தனர்.
காந்தியடிகள் ‘செய் அல்லது செத்துமடிÕ என்று கூறிய வார்த்தை ஒவ்வொரு இளைஞர்கள் மத்தியிலும் ஒவ்வொரு மாதிரி ஒலித்தது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட மிதவாதிகளின் காதில் அறப்போராட்டங்களைச் ‘செய் அல்லது செத்து மடி’ என ஒலித்தது.
தீவிரவாதிகளின் காதிலோ வெள்ளை அரசுக்குச் சேதம் விளைவிக்கும் செயல்களைச் ‘செய் அல்லது செத்துமடி’ என ஒலித்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொதித்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
1942 –ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆ-ம் நாள் காந்தியடிகளும் அன்னை கஸ்தூரிபாய் அம்மையாரும், மற்றும் நாடெங்குமுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதானது. விடுதலைப் போராட்ட வீரர்கள் வன்முறையில் ஈடுபடலாயினர். காவல் நிலையங்களைச் சூறையாடுவது, அஞ்சல் நிலையங்கள் மற்றும் கள்ளுக்கடைகளைத் தீ வைத்துக் கொளுத்துவது. தகவல் தொடர்பு சாதனங்களை உடைத்தெறிவது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.
இதற்காக திட்டம் திட்டி யார் யார் எந்த வேலையை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கிடையில் இவர்களுக்கு மற்றுமொரு செய்தி வந்து சேர்ந்தது.
“ தமிழ்நாட்டில் காமராஜர் , பத்தவச்சலம் போன்றோரும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் தொண்டர்கள் போராட்டம் நடத்துகின்றனர்” என்ற செய்தியும் மேகநாதன் மற்றும் அவரது தொண்டர்களின் காதுகளுக்கு வந்தது.
மேகநாதன் கண்கள் சிவந்தது.
“நம்மை அடிமை ஆக்கிய அன்னிய நாட்டுக்காரனை கூண்டோடு விரட்ட வேண்டும்” என்று கங்கணம் கட்டினார். “இவர்களை எப்படி விரட்ட. முதலில் இவர்களுக்கு எதிர்ப்பு கொடுக்க வேண்டும். அப்படியென்றால் எப்படி எதிர்ப்பு கொடுக்கலாம்” என்று இரவு பகலாக திட்டமிட்டார்.
1942 ஆகஸ்டு 11.
சரியாக இரவு 12 மணி.
மேகநாதன் தலைமையில் வெள்ளாளன்விளை தேரிக்காட்டில் இரகசியக்கூட்டம் நடைபெற்றது. இந்த இரகசியக் கூட்டத்தில் மேகநாதனின் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்த கூ இருட்டுக்-குள், ஆங்காங்கே தீ பந்தம் வெளிச்சத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த தீப்பந்தம் எரிந்தது போலவே இளைஞர்கள் மனதில் சுதந்திர போராட்ட தாக்கம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
“விடக்கூடாது ஆங்கிலேயர்களை விடக்கூடாது. அவனுவளை கப்பல் ஏற்றி அனுப்ப வேண்டும்”.
“எப்படி அனுப்ப முடியும்”.
“தனித்தனியாக போய் அவனிடம் மோதி மாட்டி விடக்கூடாது”.
“ஆமாம் கிடைத்தவர்களை சும்மா விடமாட்டார்கள்”.
“நகக் கண்களில் ஊசியை ஏற்றுவார்கள். தலையிலும் மார்பிலும் ரோமங்களை பிடிங்கி அலற விடுவார்கள். மிருகங்களை அடிப்பது போலவே அடிப்பார்கள்”.
“அப்படியென்றால் கூட்டமாக சென்று நாம் காரியங்களை செய்யவேண்டும்”.
ஒவ்வொரு இளைஞர்களும் ஒவ்வொரு விதமாக திட்டம் தீட்டினார்கள். அதை அந்த கூட்டத்தின் முன் வைத்தார்கள். ஆனால் ஆளாளளுக்கு திட்டம் தீட்டினால் ஜெயிக்க முடியுமா? ஒருவர் சொல்லை அனைவரும் கேட்க வேண்டும். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் போல மேகநாதன் கர்ஜித்தார்.
அங்குக் கூடி இருந்த இளஞ்சிங்கங்களின் முன்னால் நின்று பேசினார்.
அவரின் கணீர் குரல் அனைத்து இளைஞர்களையும் அடிமையாக்கியது. அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிடந்தனர்.
ஆக்ரோஷத்துடன் பேசினார் மேகநாதன்.
“காந்தியடிகள் செய் அல்லது செத்துமடி என ஆணை பிறப்பித்துள்ளார். அந்த ஆணையை ஏற்று நாடு முழுவதுமுள்ள தொண்டர்கள் வெள்ளையன் அரசுக்குச் சேதம் விளைவித்து வருகின்றனர். நாமும் நமது பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.” என மேகநாதன் உணர்ச்சிப் பொங்க பேசினார்.
உடனே தொண்டர்கள் அனைவரும் “அண்ணாச்சி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் ஆணையிடுங்கள்! நாங்கள் செய்கிறோம்” என குரல் கொடுத்தனர்.
மேகநாதன் அவர்களை நோக்கி உத்தரவிட்டார். ‘திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டிணம் வரையுள்ள தந்திக் கம்பங்களை உடைத்தெறியுங்கள்” எனக்கூறினார்.
அவ்வளவுதான் தாமதம் தொண்டர்கள் அனைவரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். இரவோடு இரவாக ஆலந்தலையிருந்து குலசேகரன்பட்டினம் வரையுள்ள தந்திக் கம்பங்களை உடைத்தெறிந்தனர். பொழுது விடிவதற்குள் தேரிக்காட்டுக்குள் சென்று தலைமறைவாகி விட்டனர்.
மறுநாள் காலை மிகவும் பரபரபப்பானது.
குலசேகரபட்டினம் போலீஸ் தந்தி கம்பு உடைத்தெரிந்த வழக்கை பதிவு செய்தது. இதற்கெல்லாம் காரணம் யார்? இவர்களை தூண்டி விட்டது யார்? என விசாரித்தனர். விசாரணை முடிவில் மேகநாதன்தான் இதற்கெல்லாம் காரணம் என தெரிய வந்தது. உடனே அவர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர் போலிசார். மேகநாதனை பிடித்து ஜெயிலில் போட்டு விட்டால் இந்த போராட்டத்துக்கெல்லாம் முடிவை ஏற்படுத்தி விடலாம் ஆகவே மேகநாதனை பிடித்து சிறையில் அடையுங்கள் என மேலதிகாரி உத்தரவு போட்டார். போலீஸ் படை சல்லபோட்டு தேடியது.
ஆனால் மேகநாதனை பிடிக்க முடியவில்லை.
மேகநாதனுக்கு இராமலிங்க பிள்ளை என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அவர் -குலசேகரன் பட்டிணம் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அவரும் இவரை தேடும் போலீஸ் படையில் ஒருவராக இருந்தார்.
மேகநாதன் போலீசிடம் சிக்கினால் அவர் கதி அதோ கதித்தான். கடுமையான தண்டனை கொடுத்து விடுவார்கள் எனவும் பிள்ளைக்கு தெரியும். அவர் அரசு வேலை செய்தாலும் அவருக்க நாட்டுப்பற்று அதிகம்.
மேகநாதனை தேடி அவரே சென்றார். தேரிக்காட்டுக்கு அவர் தங்கி இருக்கும் இடம் பிள்ளைக்கு தெரியும் எனவே பிள்ளை அங்கே சென்றார்.
சீருடையில் வந்த இராமலிங்க பிள்ளையை கண்டு உடன் இருந்தவர்கள் மிரண்டனர். ஆனால் மேகநாதன், “வாங்க பிள்ளை சௌக்கியமா?” என்று நலம் விசாரித்தார்.
“மேகநாதா உன்னை பிடிக்க எங்கள் காவல் துறைக்கு உத்தரவு வந்துள்ளது. நான் உன்னை பிடிக்க வந்துள்ளேன்” என்றார்.
சிரித்தார் மேகநாதன். “என்னப்பா பிள்ளை உனக்கே இது நியாயமாக இருக்குதா? நமது நாடு சுதந்திரம் இன்றி தவிக்கிறது. சுதந்திர போராட்டத்துக்கு போராடுகிறோம். எங்களையே உள்ளே பிடித்து போடப்போறீயாக்கும்” என்றார்.
“ஆமாம். உன்னை உள்ளே பிடித்து போட வேண்டும். அப்படியென்றால் தான் நீ சொன்னபடி கேப்பே” என்றார்.

மேகநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இங்கே பாரு மேகநாதா. உன்னை முறைப்படி போலீஸ் என்ற முறையில் கைது செய்தால் உன்னை ஆங்கிலேயர்கள் சும்மா விட மாட்டார்கள். உன் நகக்கண்ணுக்குள் ஊசியை குத்துவார்கள். சாட்டையடி கொடுப்பார்கள்” என்றார்.
“ஓ.கோ. ஆங்கிலேயனுக்கு அந்த அளவுக்கு தைரியமா? அவனை சும்மா விடலாமா? எங்கே என்னை அவன் பிடிக்கட்டும் பார்க்கலாம்” என்று கோபமாக கூறினார்.
சிரித்தார் பிள்ளை, “இங்கே பாரு மேகநாதா நான் கூட உன்னை கைது செய்யும் ஆபிசர்தான். ஆனால் எனக்கு நம்ம மக்க விடுதலைக்கு போராடுறது பிடிக்கு. அதனால உன் நம்மைக்குத்தான் சொல்லுதேன். உன்னை நான் சிறைப்பிடிக்க போறேன்” என்றார்.
அருகில் நின்றவர்கள் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்கிறார் இந்த பிள்ளை. “மேகநாதன் கைது செய்யப்பட்டால் ஆங்கிலேய அரசு அவரை சின்னா பின்னாம மாற்றி விடும் என்றும் சொல்கிறார். அதே வேளையில் நான் உங்களை சிறை வைக்கப்போகிறேன் என்றும் சொல்கிறார். இவர் நல்லவரா கெட்டவரா?”
அனைவரும் யோசித்துக்கொண்டிருககும் போதே பிள்ளை சொன்னார், “ஆம் உம்மை நான் சிறை வைக்கப்போகிறேன். அனால் போலீஸ் ஸ்டேஷனில் அல்ல”.
அனைவரும் புரியாமல் நின்றனர்.
“ஆம். இன்று முதல் மேகநாதா நீ என் வீட்டில் சிறை வைக்கப்படுவாய். என் வீட்டிலேயே சாப்பிட்டு, என் வீட்டிலேயே இருந்துகொள். போலீஸ் அதிகாரி வீட்டில் நீ இருப்பதால் உன்னை தேடி யாரும் வர மாட்டார்கள். அதே வேளையில் நீயும் தப்பித்துக்கொள்ளலாம்” என்றார்.
அனைவருக்கும் அதுவே சரி என்று பட்டது.
பிள்ளை பின்னாலேயே மேகநாதன் அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.
மேகநாதன் சப் இன்ஸ்பெக்டர் பிள்ளை வீட்டில் தங்கி விட்டார். அவரது வீட்டு மாடியில் சகல வசதியோடு தங்கி விட்டார். அவருக்கு உணவு மற்றும் உறைவிடம் அங்கு முறையாக கிடைத்தது. மேகநாதன் எங்கே போனான் என்ன ஆனான் என பலருக்கு தெரியாமல் போய் விட்டது. உடன் இருந்தவர்களுக்கே தெரியவில்லையென்றால் போலிசுக்கு தெரியவா போகிறது.

ஆனால் போலிசோ ஒரு இடத்தினை விடவில்லை. படுக்கப்பத்து பகுதியில் இருந்து ஒவ்வொரு இடமாக சல்லடைப்போட்டு தேடினர். மேகநாதன் யாருக்கெல்லாம் நண்பரோ, அவர்களை பிடித்து தாக்கினர். மேகநாதன் உறவுக்காரர்களை மிரட்டினர். மேகநாதன் மட்டும் போலீசில் மாட்டா விட்டால் சொந்தகாரர்கள் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷன் வைத்து உதைத்து விடுவோம் என்று மிரட்டினர். அப்படியாவது மேகநாதன் போலீசில் சரணடைய மாட்டாரா? எனகங்கணம் கட்டி வேலை செய்னர்.
மேகநாதன் குலசேகரன்பட்டிணம் காவல்துறை உதவி ஆய்வாளர் இராமலிங்கம் பிள்ளை வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டார் என்பது அந்த போலிசாருக்கு தெரியவில்லை. தெரிந்தவர்களும் மூச்சி விடவில்லை. இதனால் அவரையும் அவரது தொண்டர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடினர்.
மேகநாதன் தலைமறைவு ஆக காரணம் இருந்தது. இவர்தான் கைதான தொண்டர்களின் குடும்பத்தாருக்கு செலவுக்கு பணம் கொடுத்து அவர்களை பாதுகாத்து கொள்வார். எனவே கைதாகி உள்ளே செல்லும் வீரர்கள் தங்கள் குடும்பத்தினை பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள். தனது சொந்த பணத்தினை இந்த மக்களுக்காக வாரி இறைத்துக் கொண்டிருந்தார்.
மேகநாதன் தலைமறைவாக இருக்கிறார். இந்த வேளையில் யார் போராட்டத்தினை நடத்தி செல்வார்கள்.
இந்த நேரத்தில் தான் ஆறுமுகநேரியில் சுதந்திர சேனை என்ற பெயரில் ஒரு படை துவங்குகிறது. கே.டி.கோசல்ராம், பி.எஸ் ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ். பெஞ்சமின், எம்.எஸ் செல்வராஜன, சுந்தரலிங்கம். த. தங்கவேல், நாராயணன், ஆர் செல்லதுரை ஆகியோர் உள்பட பலர் சேர்ந்து இந்த படையை அமைத்தனர்.
1942 ஆகஸ்ட் 9 ம் தேதி ஆறுமுகநேரியில் இந்து உயர்நிலைப்பள்ளயில் ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்துக்கு தங்கவேல் நாடார் தலைமை தாங்கினார். பம்பாய் காங்கிரசின் தீர்மானம் அங்கு விளக்கப்பட்டது. “அடுத்த 12 ந்தேதி ஆறுமுகநேரி சந்தைத் திடலில் கூடவேண்டும் அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்” என கூறினார் கே.டி.கோசல்ராம்.
தொண்டர்கள் அந்த நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர்.
அந்த நாளும் வந்தது. ஆறுமுகநேரி சந்தை திடல் நிரம்பி வழிந்தது.
சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த தியாகிகள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். கே.டி.கோசல் ராம் உணர்ச்சியோடு பேசினார், “அனைவரும் வாருங்கள் உப்பளம் செல்வோம். அங்கே அமைதியான போராட்டத்தினை தொடருவோம்” என்று கூறினார். அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிசார் கைது செய்தனர்.
கைது செய்யதோடு விட்டார்களா? 15 நாள் கடுங்காவலில் வைத்தனர். அப்போது நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டது. தலையிலும் மார்பிலும் உள்ள ரோமங்களைப் பிடிங்கி அலற விட்டனர்.
கொடுமை கொடுமையிலும் கொடுமை. இளைஞர்கள் அலறினர். ஆனால் அடி பணியவில்லை. அரஜாக்கத்தினை கண்டு வெகுண்டு எழுந்தனர். இனிமேல் இவர்களிடம் சத்தியாகிரகம்செய்து பயன் இல்லை . அகிம்சைவழி இவர்களிடம் செல்லுபடியாகது என உணர்ந்தனர். எனவே 15 நாள் கழித்து வெளியே வந்தனர். மீண்டும் செம்டம்பர் முதல் தேதி கோசல்ராம் தலைமையில் ஒன்று கூடினர்.
“அண்ணாச்சி. இவர்களிடம் நாம் அடிபணிந்து போவதில் எந்தவொரு பயனும் இல்லை”.
“ஆமாம் நானும் அதைத்தான் யோசிக்கிறேன்”.
“நாம் இவர்களை சும்மா விடக்கூடாது. நமது மண்ணில் இருந்து கொண்டு நமக்கு எதிராக கொடுமை செய்கிறார்கள். அவர்களை கையை உடைக்க வேண்டும்” என்று கொதித்தனர்.
கோசல்ராம் யோசித்தார். “உண்மைத்தான் நாம் அகிம்சை வழியில் சென்றால் அவர்களை நம்மை பிடித்து தண்டனை கொடுத்து விடுகிறான். அப்படியென்றால் நாம் தீவிர வாதிகளாக மாறவேண்டும்”.
“எப்படி-?”
“தற்கொலை படை ஒன்றை அமைக்கவேண்டும்”.
“முடியுமா?”
“முடியும்”. அனைவரையும் அழைத்தார். “ நண்பர்களே இனி நமது போராட்டம் வேறுமாதிரி தொடர வேண்டும். ஒருவெள்ளைக் காகிதத்தை கொண்டு வாருங்கள். அதில் தொண்டர்கள் அனைவரும் தங்கள் கைகளைக் கீறி ரத்தத்தால் கையெழுத்து இடுங்கள்” என்றார்.
அவர் பேச்சை அனைவரும் அப்படியே கேட்டார்கள்.
அங்கு வந்த வீரர்கள் கை விரலில் ஊசியால்குத்தி ரத்தக் கையெழுத்திட்டனர்.
ஜி.மகராஜன், அமலிபுரம் பெஞ்சமின், ஏரல் நடராஜன்செட்டியார், கொட்டஙகாடு ஏ.டி.காசி, மெய்யன் பிறப்பு சிவந்திக்கனி,பரமன்குறிச்சி நாகமணி வாத்தியார், செட்டியார் பத்து எம். அருணாசலம், வாழ வல்லான் பச்சைப்பெருமாள், கொழுவை நல்லூர் இராமலிங்கம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இது ஒரு புறம் இருக்கட்டும் புரட்சி செய்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு ஆள் வேண்டுமே. அதற்கும் ஆள்கள் தயாரானார்கள். வெள்ளக்கண்ணு நாடார், வீரபாகு நாடார், துரைசாம நாடார், வடிவேலு, சுடலை முத்து, சுப்பையன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஜெயிலுக்குள் செல்லும் போராட்ட காரர்கள் நீதிமன்ற செலவு மற்றும் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
போராட்ட காரர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து ஆங்கிலேய அரசுக்கு தலைவலி கொடுக்க முடிவு செய்தனர்.
அதேவேளையில் மேகநாதன் மறைந்து வாழ்ந்த காரணத்தினால் உடன் குடி பகுதியில் தலைவர் இல்லாமல் தவித்தனர். ஆகவே படுக்கப்பத்தைச் சேர்ந்த மங்களா பொன்னம்பலம் என்ற 18 வயது இளைஞர் இப்பகுதி மக்களுக்கு தலைமை வகித்தார்.
வயது சிறியதாக இருந்தாலும், நாட்டின் பற்றும், தலைமை பொறுப்பும் இவருக்கு அதிகமாக இருந்தது. எனவே அவரும் போராட்டத்தில் இறங்கினார்.
உடன்குடி பகுதியைச் சேர்ந்த வீரர்களை திரட்டி செப்டம்பர் 16 ஆ-ம் தேதி நள்ளிரவில் தாங்கையூர் அருகே இரகசியக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில் Ôசாத்தான்குளம் காவல் நிலையத்தைக் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானித்தனர். ஏற்கனவே ஆறுமுநேரியில் நடந்த கூட்டத்திலும் அதே முடிவு எடுக்கப்பட்டது. எனவே அங்கிருந்து வந்த சுதந்திர போராட்ட வீரர்களும் இவர்களோடு இணைந்துகொண்டனர். இந்த வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சாத்தாள்குளத்தை நோக்கி நடந்தனர். அதற்குள் சாத்தான்குளத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஓடோடி வந்தனர்.
“நமது திட்டம் எப்படியோ போலீசாருக்குத் தெரிந்து விட்டது; ஆகையால் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் படையைக் குவித்து உள்ளனர். எனவே நீங்கள் அங்கே செல்ல வேண்டாம்” எனத் தடுத்துவிட்டனர்.
திரண்டு நின்ற இளைஞர்கள் தவித்தனர். ஏதாவது செய்யவேண்டும். அரசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம் என கொதித்து எழுந்தனர்.
அந்த இளைஞர்கள் மெஞ்ஞானபுரம் அஞ்சலகத்தை உடைக்கலாமா? என முடிவு செய்தனர்.
இதற்காக மெஞ்ஞானபுரம் நோக்கி சென்றனர்.
அங்கே இவர்கள் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது
(குலசேகரபட்டினம் லோன் துரை வரலாறு தொடரும்)


