திருச்செந்தூர் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயர்த்தபட்டுள்ளதாக சாலை மறியலில் ஈடுபட்ட வணிகர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகம் பாதிப்படைந்து வருவதாகவும், விதிகளை மீறி மற்ற நகராட்சிகளை விட அதிகப்படியாக வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறி, திருச்செந்தூர் அனைத்து வணிகர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து பகத்சிங் பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதி்ல் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில இணைச் செயலர் குருசாமி, இளைஞரணி துணைச் செயலர் முனியாண்டி, செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் துரைசிங், செயலர் கார்க்கி, நிர்வாகி மணி, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென் மண்டலத் தலைவர் கோடீஸ்வரன், தெற்கு மாவட்டத் தலைவர் வேலாயுதபெருமாள், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கச் செயலர் செல்வகுமார், இணைச் செயலர் பாலமுருகன், யாதவ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வீரமந்திரகுமார் உள்ளிட்ட 60 பேரை, டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


