மாணவர்களிடையே ஏதேனும் போதைப்பொருள் பயன்பாடு தெரியவந்தால் மாணவர்கள் கைபேசி செயலி வழியாக புகார் அளிக்கலாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (27.03.2025) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற நிலையை உருவாக்கிட போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு ‘DRUG FREE TN” என்ற கைபேசி செயலி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசும் போது தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் உபயோகிப்பதனால், மன ரீதியாக தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி, ஆளுமைத்தன்மை, மாற்றங்கள், ஞாபகமறதி, வலிப்பு நோய், மாயத்தோற்றங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன், உடல் ரீதியாக கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப்புண், கணையத்தில் வீக்கம், வாய் புற்றுநோய், தொண்டை உணவுக்குழாய் மற்றும் குடல் சத்துக் குறைபாடுகள், உடல் வீக்கம், நீரிழிவு நோய், இருதய வீக்கம், கை, கால் செயல் இழத்தல், நரம்புத்தளர்ச்சி, மூளை பாதிப்புகள், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, இரத்த சோகை, ஆண்மையிழப்பு, கண் பார்வை பாதிப்பு, போன்ற பிரச்சனைகளும், சமுதாயத்தில் கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவுகள், விவாகரத்து, குடும்பத்தில் அக்கறையின்மை, வேலை செய்ய இயலாமை, வேலையின்மை மற்றும் வேலையிழப்பு, பொருளாதாரப் பிரச்சனைகள், கடனாளி ஆகுதல், அதிக செலவு செய்தல், ஏளனப் பேச்சுக்கள், மரியாதை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, உறவினர் சுற்றத்தாரின் வெறுப்புகளுக்கு ஆளாக நேரிடுவதுடன், குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி குழந்தைகளின் முன்னேற்றத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும், போதை எதிர்ப்பு மன்றங்கள் (யுவெi னுசரப ஊடரடிள) ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருட்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்ற அடிப்பிடையில் தமிழ்நாடு அரசால் ‘DRUG FREE TN” என்ற சிறப்பான கைபேசி செயலியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ’கூகுள் ப்ளே ஸ்டோர்”-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து போதைப்பொருள் சம்பந்தப்பட்ட புகார்களை அளித்தால் போதும். அந்த தகவல் காவல்துறைக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, கல்வி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை போன்ற துறைகள் மூலமாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இந்த சுவரொட்டிகளை தயாரித்தே கல்லூரி மாணவர்கள் தான். ஒவ்வொரு மாணவர்களின் நலனுக்காக இந்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்.
தங்களது பெற்றோர்கள், உறவினர்கள், கிராம மக்களிடையே போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். மாணவர்களிடையே ஏதேனும் போதைப்பொருள் பயன்பாடு தெரியவந்தால் மாணவர்கள் கைபேசி செயலி வழியாக புகார் அளிக்கலாம். அதுபோன்று, ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ‘DRUG FREE TN” என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து போதைப்பொருள் நடமாட்டம் இருந்தால் கண்டிப்பாக புகார் தெரிவிக்க வேண்டும். புகாரின் மீது உடனடி நடவடிக்கை இருக்கும். எனவே, மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் வெற்றி பெற எண்ணற்ற சிறந்த வழிகள் உள்ளது. அந்த வழியில் அனைத்து மாணவர்களும் தவறாது பயணித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்; என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
முன்னதாக, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர். பின்னர், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கல்வி நிலையத்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர் (கலால்) கல்யாணகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


