மணிமுத்தாறு பூங்காவில் கே.டி. கோசல்ராம் முழு உருவச்சிலை அமைத்து, அணையின் பிரதான கால்வாய்க்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணை தலைவர் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், “கே.டி. கோசல்ராம், சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது 1953 ம் வருடம் சட்டமன்றத்தில் மணிமுத்தாறு அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அன்றைய தினம் தமிழக முதல்வராக இருந்த இராஜாஜி புதிதாக அணை கட்டுவதற்கு அரசிடம் பணம் இல்லை என்றும், கே.டி. கோசல்ராம் ரூ. 1 கோடி தந்தால் அணை கட்டுவதற்கு தயார் என்றும் பதிலளித்தார்.
கே.டி. கோசல்ராம், ரூபாய் 1 கோடியை மக்களிடம் வசூலித்து அரசிடம் ஒப்படைத்தார். அதன் பின்பு முதல்வரான பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் 1958 ம் வருடம் புதிதாக கட்டப்பட்ட அணை திறக்கப்பட்டது. இந்த விபரங்கள் அனைத்தும் தமிழக சட்டசபை நடவடிக்கைகளை பரிசீலனை செய்து பார்த்தால் தெளிவாக துலங்கும்.
முல்லை பெரியார் அணை கட்டுவதற்கு பொறியாளர் பென்னி குயிக் முழுமுதற் காரணமாக இருந்தது போன்று, மணிமுத்தாறு அணை கட்டுவதற்கும் முழுமுதற் காரணம் கே.டி. கோசல்ராம் தான் என்பதை வருங்கால இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக மணிமுத்தாறு அணையின் அருகில் உள்ள பூங்காவில் கோசல்ராம் M.P அவர்களின் முழு உருவச்சிலையும் மணிமுத்தாறு பிரதான கால்வாய்க்கு கே.டி. கோசல்ராம் பெயரையும் வைத்தால், அவரது தியாகத்திற்கு கொடுத்த அங்கீகாரமாகும்.
கே.டி. கோசல்ராம், முன்னாள் முதல்வர் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளை தமிழின தலைவர் கலைஞர், தன்னுடைய பேச்சிலும், எழுத்திலும் அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆகவே தமிழக முதல்வர், மணிமுத்தாறு அணையின் அருகில் உள்ள பூங்காவில் கே.டி. கோசல்ராம் முழு உருவச்சிலை அமைப்பதற்கும், மணிமுத்தாறு அணையின் பிரதான கால்வாய்க்கு கே.டி. கோசல்ராம் பெயரையும் வைப்பதற்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


