மகன் புற்றுநோயால் இறந்து விடுவான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் உயிரை விட்ட தாய். தாய் உயிரிழந்த அடுத்த நிமிடமே மகனின் உயிரும் பிரிந்த பரிதாபம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் உச்சிமகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி மாரியம்மாள்(70). இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. மாடசாமி உடல்நலக்குறைவால் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மகன் பாலகிருஷ்ணணுக்கு (40) மதனா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பாலகிருஷ்ணன் லோடு மேனாக திருநெல்வேலியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதற்கிடையில் பாலகிருஷ்ணணும் மதனாவும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் மதனாவின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
கடந்த மாதம் மாடசாமிக்கு உடலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக தனது மகன் பாலகிருஷ்ணனை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தாய் மாரியம்மாள் அழைத்துக் சென்றுள்ளார். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உங்கள் மகனுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் கதறி அழுதுள்ளார். உடனடியாக இங்கு சிகிச்சைக்கு சேர்த்தால் மட்டுமே உங்கள் மகனை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் மகனை சேர்த்து அருகே இருந்து கவனித்து வந்துள்ளார் மாரியம்மாள்.
இந்த நிலையில் இன்று காலையில் சுமார் 8 மணி அளவில் திடீரென மகன் பாலகிருஷ்ணணுக்கு வலி அதிகமாகி உள்ளது. உடனே வந்து பார்த்த மருத்துவர்கள் உங்கள் மகன் இன்னும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மாரியம்மாள் கண்ணீரோடு மருத்துவமனை வார்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இதற்கிடையில் மகனுக்கு மேலும் வலி அதிகமாகி உள்ளது. இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் அவரது தாயை தேடி உள்ளனர். ஆனால் அவரை காணவில்லை. இதைதொடர்ந்து மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் தேடிபோது மோட்டார் ரூம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
தனது மகன் உயிரிழந்து விடுவான் என்று தெரிந்ததும் மகனுக்கு முன்பு தான் இறந்து விட வேண்டும் என்று நினைத்த தாய் அதிர்ச்சியில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மாரியம்மாள் உடலை கைப்பற்றிய திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தாய் இறந்த அடுத்த சில நிமிடங்களில் மகனின் உயிரும் பிரிந்தது. இந்த சம்பவம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்தவர்களை கலங்கச் செய்தது.


