திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் 9 ம் திருநாளை முன்னிட்டு குவிந்து வரும் பக்தர்கள். தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலான மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதலே தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஆங்காங்கே சாரல் மலையும் பெய்து வருகிறது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆத்தூர், காயல்பட்டினம், குரும்பூர், உடன்குடி, குலசேகரப்பட்டினம் போன்ற பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நடந்து வரும் நிலையில் இன்று 9 ஆம் திருவிழாவை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
இன்று பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் பால்குடம், காவடி எடுத்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று 9 ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி அலைவாயுகந்தபெருமாள் சப்பரத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலமாக பவனி வருகிறார். சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


