திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா திருத்தேரோட்டம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி குமரவிடங்க பெருமானும் அம்பாள் தெய்வானையும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவிழாவின் ஐந்தாம் திருநாளை முன்னிட்டு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.
ஏழாம் திருநாளான 9-ம் தேதி சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவும், எட்டாம் திருவிழாவான 10-ம் தேதி சுவாமி சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் அம்பாள் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அன்றைய தினம் தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு பகுதிகளிலுள்ள பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து பல்லாயிரக்கணக்கானோர் முருகப்பெருமானை அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர்.
இந்த நிலையில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடந்து வருகிறது.
திருத்தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம் தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்கபெருமான் பெரிய தேரில் வள்ளி தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளினார்.
தேரோட்டத்தை முன்னிட்டு காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து காலை 7.50 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது.
தேருக்கு முன்பு கோவில் யானை தெய்வானை நடந்து வந்தது. அப்போது அங்கு நின்ற பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தும்பிக்கையால் ஆசி வழங்கியது.
இந்த திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு ஆரோகரா கடம்பனுக்கு ஆரோகார வேலனுக்கு ஆரோகரா என கோஷமிட்டபடி வடம் பிடித்து இழுத்தனர்.
அதை தொடர்ந்து தெய்வானை அம்பாள் தனித்தேரில் பவனி வந்தார்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 500 க்கு மேற்பட்ட காவல்துறையினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


