தூத்துக்குடியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துறைமுக நகரான தூத்துக்குடிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் எப்போதும் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாநகர் பகுதியில் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரையும், மாலை 4 மணி 9 மணி வரை கனரக வாகனங்களுக்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதால் காவல்துறை இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாநகர ஏ.எஸ்.பி. தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


