மெஞ்ஞானபுரம் அருகே மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 29 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ருக்குமணி (72). இவர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். சந்திரசேகர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். கடந்த பிப்.1-ந் தேதி மதியம் 3 மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் புளி வியாபாரி போல் சென்றுள்ளனர். அங்கு இருந்த ருக்குமணியிடம் புளி இருக்கிறதா? என கேட்டுள்ளனர்.
அவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் திடீரென்று 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட 29 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து ருக்குமணி கொடுத்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், இந்த வழப்பறியில் ஈடுபட்ட நெல்லை ராஜவள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் முத்துக்குமார் (46), ஆழ்வார்திருநகரியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (30) ஆகிய 2 பேரையும் கைது ெசய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான நெல்லை கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துப்பாண்டி (32) என்பவர் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 29 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் முத்து பாண்டியை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


