தூத்துக்குடியில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிய 70 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
மத்திய அரசின் மோட்டார் வாகன விதிகள் திருத்த சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறலுக்கான கட்டணம், பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அபராத கட்டணம், லைசன்ஸ் தற்காலிக ரத்து போன்ற நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கடந்த ஒரு மாத காலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 70 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், வெங்கடேஷ் ஆகியோர் கூறுகையில், “தூத்துக்குடியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிரிகரித்து வருகிறது. இதனை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துக்களை தவிர்க்கும் வகையில் செல்போனில் பேசியபடி வாகனங்களில் சென்ற 70க்கும் மேற்பட்டோருக்கு ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் 3 மாத காலத்திற்கு அவர்கள் வாகனம் ஓட்டமுடியாத நிலை ஏற்படும். இதனை மீறினால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். எனவே வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தவேண்டாம். மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும், ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். இல்லையேல், இருவருக்கும் தலா 1,000 ரூபாய் அபராதம் என தெரிவித்தனர்.


