முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் தைப்பூசம், மாசி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்பட வருடத்திற்கு பல்வேறு மாதங்கள் திருவிழா நடைபெறும். இதில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது விழாவின் சிகர நிகழ்ச்சி அன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும்.
வருகின்ற மார்ச் 3ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அன்றில் இருந்து 10 வது நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தேரோடும் தெற்கு ரத வீதியில் பல லட்சம் மதிப்பில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்செந்தூர் நாழிக்கிணறு செல்லும் பாதையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ள பாதையை உடைத்து தேங்கும் மழை நீரை கொண்டு செல்வதற்காக கால்வாய்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக புதிதாக போடப்பட்ட இந்த சாலையை வீட்டின் ஓரமாக உடைத்து கழிவுநீர் கால்வாய் கொண்டு செல்லும் பாதை அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
புதிதாக அமைக்கப்பட்ட சாலையை உடைத்த நகராட்சி பணியாளர்களை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக போடப்பட்டுள்ள சாலையை உடைத்தால் இன்றும் 20 நாட்களில் மாசி திருவிழா தேரோடும் சாலை இது எனவே சாலையை உடைக்க கூடாது என்று போராட்டத்தில் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சாலையை இன்று உடைக்கும் போது அருகே இருந்த வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


