நாலாட்டின்புத்தூரில் மது குடிப்பதை கண்டித்ததால் தாயை மரக்கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புந்தூர் அருகேயுள்ள லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (50). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஆனந்தவள்ளி (45). இவர்களது மூத்த மகன் மகாராஜா (21). கூலி தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும் மகாராஜா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகாராஜா அருகில் இருந்த மரக்கட்டையால் தாயை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


